பண மோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்புடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆகஸ்ட் 14ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி மாபியாக்கள், அரசு ஊழியர்களுக்கு தொடர்புடைய இடங்கள், ஏழைகள், நலிவடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் நிலத்தை அபகரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு அதிகாரியுடன் தொடர்புடைய இடங்கள் என 22 இடங்களில் சோதனை நடத்தியது.
இதில் ராஞ்சியில் உள்ள 4.55 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய உதவியாளர் என கூறப்படும் அமித் அகர்வால் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த பண மோசடி வழக்கில் ஹேமந்த் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதேபோல் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், பல்வேறு இடங்களில் நில அபகரிப்பு கும்பலால் பிளாட்டுகள் அபகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.