;
Athirady Tamil News

குஜராத் மக்களின் மனங்களை வென்றார்: போலீஸ் அதிகாரிக்கு பூ மழை தூவி கண்ணீர் மல்க உற்சாக வழியனுப்பு விழா!!

0

ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்தவர் ரவிதேஜா. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் குஜராத் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு ஜூனாகட் மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ரவிதேஜா அப்பகுதியில் சிறப்பாக பணியாற்றி ரவுடிகளை ஒழித்து கட்டியுள்ளார். அவரது அதிரடி நடவடிக்கையால் குற்றச்செயல்கள் குறைந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து ரவி தேஜா தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ரவி தேஜா காந்திநகர் மாவட்ட சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். தங்கள் பகுதியில் இருந்து நேர்மையான அதிகாரி ஒருவர் இடம் மாறுதலாகி செல்வது வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவரை மகிழ்ச்சியாக வழியனுப்பி வைக்க பொதுமக்கள் எண்ணினர்.

இதன்படி வழிநெடுக திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். போலீஸ் அதிகாரி ரவிதேஜாவின் காரை அலங்கரித்து அதில் அவரை அமர வைத்து இழுத்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வெளியே கூடை கூடையாக பூக்களை கொண்டு வந்து தயாராக நின்றிருந்த பொதுமக்கள் ரவி தேஜாவின் மீது பூ மழை பொழிந்தனர். சாலையோரமாக நின்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நேரில் வந்து அதிகாரி ரவி தேஜாவை மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.

இதனை புன்முறுவலோடு மகிழ்ச்சி பொங்க ஏற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரி ரவி தேஜா கைகூப்பி பொது மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து இப்படி மக்களின் மனங்களை வென்ற நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது என்று பொது மக்களும், இளைஞர்களும் அவரை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.