வழிமறித்த காட்டு யானை கபாலியை சாந்தப்படுத்திய அரசு பஸ் டிரைவர்!!
கேரள மாநிலத்தில் வனப்பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீதான காட்டு யானைகளின் தாக்குதல்கள் வழக்கமாகி வருகிறது. அவ்வாறு யானைகள் தாக்கக்கூடிய விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. அதுபோல் ஒரு வீடியோ தற்போது பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோவில் யானை தாக்கவில்லை. மாறாக, அரசு பஸ் டிரைவர் சத்தமாக பேசுவதை நின்று கவனித்தபடி இருக்கிறது அந்த யானை. அதிரப்பள்ளி-மலக்கப்பாரா வழித்தடத்தில் அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை பேபி என்ற டிரைவர் ஓட்டிச்சென்றார். இந்நிலையில் வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்த அந்த பஸ்சை காட்டு யானை கபாலி வழிமறித்தது.
இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து கபாலி யானை பஸ்சை நோக்கி வேகமாக வந்தது. அந்த யானை தங்களை தாக்கிவிடும் என்று பஸ்சில் இருந்த பயணிகள் பயந்தனர். அப்போது பஸ்சில் டிரைவர் யானைக்கு கேட்கும் வகையல் சத்தமாக பேசினார். அமைதியாக இரு… அவர் யாரையும் தாக்கமாட்டார்… கண்டிப்பாக எனக்கு கீழ்ப்படிவார்… என்று பயணிகளை நோக்கி சத்தமாக பேசி, தங்களுக்கு வழிவிடு என்று யானையிடம் கேட்டுக்கொண்டார். டிரைவர் பேசுவதை கவனிப்பது போன்று நின்று கொண்டிருந்த யானை, பஸ்சை தாக்கவில்லை.
டிரைவர் கூறியதுபோல், பஸ்சின் ஜன்னல் ஷட்டர்களை மூடிக்கொண்டு பயணிகள் அனைவரும் பஸ்சுக்குள்ளேயே அமர்ந்திருந்தனர். சுமார் அரை மணி நேரமாக பஸ்சை மறித்தபடியே யானை நின்றது. பின்பு வனப்பகுதிக்குள் யானை சென்றுவிட்டது. அதன்பிறகு அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பஸ்சை வழிமறித்த காட்டுயானையை சாந்தப்படுத்தும் வகையில் டிரைவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.