;
Athirady Tamil News

அழகி போட்டியில் பாலியல் அத்துமீறல்: இந்தோனேசியாவில் பங்கேற்ற பெண்கள் பரபரப்பு புகார்!!

0

அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய 2 நாடுகளை உள்ளடக்கிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு உலகெங்கிலும் வருடாவருடம் மிஸ் யுனிவர்ஸ் எனும் பெயரில் அழகிப்போட்டிகளை நடத்தி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இப்போட்டி மிகவும் பிரபலமாக உள்ளது.

இதில் வெற்றி பெறுபவர்கள் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களாக விளங்குகிறார்கள். அவ்வகையில், மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டிகள் இம்மாதம் 3ம் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது. ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். தற்போது 3 பெண்கள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில் மேலும் பலர் தங்களுக்கு நேர்ந்ததை கூற முன் வருவார்கள் என அவர்களின் வழக்கறிஞர் மெல்லிஸா அங்க்ரேனி கூறினார்.

அவர் இது சம்பந்தமாக கூறியதாவது: ஆகஸ்ட் 3 ஆம் தேதி இறுதிப்போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு, ‘உடல் சோதனை’ மற்றும் புகைப்படங்களுக்காக போட்டியிடும் பெண்களை மேலாடைகளை கழற்றுமாறு கூறியுள்ளனர். போட்டியில் பங்கு பெற்ற பெண்களின் உடலில் ஏதேனும் தழும்புகள், செல்லுலாய்ட் அல்லது பச்சை குத்தப்பட்டிருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என அவர்கள் இதற்கு காரணம் கூறியுள்ளனர். இவ்வாறு அந்த வழக்கறிஞர் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் ஒரு போட்டியாளர் கூறுகையில், “எனது உரிமைகள் மீறப்பட்டதாக நான் உணர்கிறேன். இது என்னை மனதளவில் மிகவும் பாதித்துள்ளது. நான் தூக்கத்தை இழந்து விட்டேன்.” என்றார்.

“ஒரு மூடிய அறையில் உடல் சோதனைகள் செய்யப்பட்டது. அங்கு சில ஆண்களும் இருந்தனர். கதவு முழுவதுமாக மூடப்படவில்லை, இதனால் வெளியில் உள்ளவர்களுக்கும் உள்ளே நடைபெறுவதை பார்க்க முடிந்தது” என மற்றொரு போட்டியாளர் தெரிவித்தார். தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா அமைப்பு இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் என்று அதன் உரிமையாளர் பாப்பி கபெல்லா தெரிவித்துள்ளார்.

உலக மிஸ் யுனிவர்ஸ் அமைப்பும் இந்த குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து வருவதாகவும், பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை, ‘மிகவும் தீவிரமாக’ எடுத்துக் கொள்வதாகவும் கூறியது. போட்டியாளர்களின் வயது, உடல் எடை மற்றும் உயரத்தின் விகிதாசாரத்தை சரி பார்க்க உடல் பரிசோதனைகள் இயல்பானவை என்றாலும் போட்டியாளர்கள் நிர்வாணமாக இருக்குமாறு கேட்கப்படுவதில்லை என முன்னாள் மிஸ் இந்தோனேசியா மரியா ஹர்ஃபான்டி கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.