;
Athirady Tamil News

சிக்கலில் சீன பொருளாதாரம்; வீழ்ச்சியடையும் இந்திய பங்குச்சந்தை!!

0

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்து மக்களின் வாங்கும் திறன் குறையும் போது பணவீக்கம் (inflation) எனும் நிலை தோன்றும். ஆனால் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை குறையும் போது அவற்றின் விலையும் குறைய தொடங்கும். குறைந்த அளவிலான பணத்தில் அதிக அளவிலான பொருட்களை வாங்க முடியும். இந்நிலையை டீஃப்லேஷன் (deflation) எனப்படும் பணவாட்டமாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சீனாவில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஜூலை மாதம் பொருளாதாரம் டீஃப்லேஷன் நிலையை அடைந்தது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு அங்கு பொருளாதாரம் மீண்டு, வளர்ந்தும் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில் முதல் முறையாக இந்நிலை தற்போது தோன்றியுள்ளது.

சீனாவில் மக்கள் செலவினங்களை மிகவும் குறைத்து வருவதால் பொருளாதாரம் வாட்டத்தை அடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதாரத்தில் 25 சதவீதத்திற்கும் மேல் பங்கு வகித்த ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் சரிவும் இதற்கு மற்றொரு காரணம். பணவீக்கத்தின் முக்கிய அளவீடான நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index) கடந்த ஜூலை மாதம் 0.3 ஆக குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. நுகர்வோரின் மனநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தவிர பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக செலவு செய்யும் எண்ணம் மறைவதுதான் பணவாட்டம் ஏற்பட முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இது ஒரு அபாயகரமான பொருளாதார நிலை என நிபுணர்களால் வர்ணிக்கப்படுகிறது. நுகர்வோர் குறைவதால் உற்பத்தியை குறைக்கவும், புதிய தொழிலாளர்களை பணியமர்த்துவதை நிறுத்தி வைக்கவும், தேவைப்பட்டால் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யவும் நிறுவனங்கள் திட்டமிடும். இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். சீனாவின் பொருளாதார வாட்டம் குறித்த அறிவிப்பின் தொடர்ச்சியாக இந்திய பங்குச் சந்தையில் பங்குகள் சரிவை சந்தித்தன. சீனாவின் பொருளாதார மாற்றம் உலகளவில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை பொருளாதார நிபுணர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.