யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம்: 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் நாடு அரசின் 2023-24க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காகப் பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச்செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் தொடக்கமாக. 07.08.2023, அன்று நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால், 2023ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா 25,000 ரூபாய்க்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ஆம் ஆண்டுக்கான 28.05.2023 அன்று நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25,000 ரூபாய் ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து, 11.08.2023 முதல் 22.08.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.