9ஐயும் செய்யுங்கள், 13ஐ பின் பார்ப்போம்’!!
மக்கள் ஆணைக்கு இடமளிக்க வேண்டும் என்றும் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 9 மாகாணங்களையும் இயங்கச் செய்து, அதன் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி 13 ஆவது திருத்தத்தை செயற்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் பின்னர், தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “ அரசாங்கத்தை மக்கள் இறையாண்மை மற்றும் மக்கள் வாக்குகள் மூலமே அமைக்க வேண்டும். இந்நிலையில் இப்போது எந்தவொரு மாகாண சபையிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லை. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அரசியல் துறையில் முன்னால் உள்ள பயிர்கள் என்று கூறினீர்கள். ஆனால் இந்த பயிர்கள் அனைத்தும் இறந்துவிட்டன.
தேர்தலுக்கு இடமில்லாமையே காரணமாகும். இப்போது தேர்தலுக்கு பயப்படுகின்றனர். இதனால் தயவு செய்து சர்வகட்சி கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை செயற்படுத்துங்கள்.
அரச தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை முன்வைக்குமாறு கேட்டிருந்தோம். இப்போது உங்களின் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்படி உங்களின் யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக எதனை செயற்படுத்தினாலும், தேர்தல் நடக்காமையினால் உள்ளூராட்சி துறைகளின் அதிகாரங்களும் மாகாண சபைகளின் அதிகாரங்களும் நிறைவேற்று அதிகாரமுடையவரிடமே உள்ளது.
நீங்கள் உங்கள் கட்சியில் 2, 3 பேர் இருப்பதாகவே கூறினீர்கள். ஆனால் உங்களை இந்த பாராளுமன்றத்தில் 132 பேரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகியுள்ளீர்கள். உங்களின் அமைச்சரவை உள்ளது. இதன்படி தேர்தலுக்கு இடமளிக்க வேண்டும்.
நாங்கள் எப்போதும் எதிர்க்கட்சியாகவே இருக்கப் போவதில்லை. நல்ல விடயங்களுக்கு ஆதரவளிப்போம். உங்களின் வரைபு தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இதன்படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும்” என்றார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “இந்த அரசியலமைப்பு திருத்தத்தை தருகின்றேன். அதனை நிறைவேற்றுங்கள். சட்டங்களை நிறைவேற்றுங்கள். திருத்தங்களை கொண்டு வாரலாம். அவற்றை நிறைவேற்றிய பின்னர் தேர்தலை நடத்தலாம் என்று கூறியுள்ளேன். ஆபிரகாம் லிங்கன் போன்று இருக்குமாறு கூறினால் அவரை போலவும் இருக்கலாம்” என்றார்.