;
Athirady Tamil News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!!

0

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தும் காணப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி 103 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேமாக குறைந்து வருகிறது. இதனால் அணைக்குள் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை, கிறிஸ்துவ கோபுரம் ஆகியவை முழுமையாக தெரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் அவ்வப்போது மழை பெய்தால் மட்டுமே அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. கடந்த மாதம் 3-வது வாரத்தில் மழை பெய்தபோது தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 நாட்கள் அதிகரித்து காணப்பட்டது. பின்னர் அங்கு மழை நின்றதும் தண்ணீர் திறப்பையும் நிறுத்தினர். இதையடுத்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு நேற்று முன்தினம் முதல் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை வினாடிக்கு 4654 கனஅடி வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 26 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 56.07 அடியாக உள்ளது. மேலும் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 7500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 21.84 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.