சேலம், நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை!!
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. குறிப்பாக வீரகனூர், கெங்கவல்லி, ஏற்காடு, காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு 8 மணியளவில் இடி, மின்னலுடன் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் வயல்வெளிகளிலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆத்தூர் வீரகனூரில் 7 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதே போல சேலம் மாநகரில் நேற்றிரவு 8.30 மணியளவில் மழை தொடங்கியது. தொடர்ந்து அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் உள்பட பல பகுதிகளில் கனமழையாக கொட்டியது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கிச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை, தாதாகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் கடந்த சில நாட்களாக புழுக்கத்தில் தவித்த மக்கள் நிம்மதியாக தூங்கினர். இதற்கிடையே மழையை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் கொசுக்கடியால் பொது மக்கள் அவதி அடைந்தனர்.
இதேபோல் காடையாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 8.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை அதிகாலை 2 மணிவரை பெய்தது. குறிப்பாக 12 மணிமுதல் 2 மணிவரை பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள சரபங்கா ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியது. ஏற்காட்டில் நேற்றிரவு 1 மணிமுதல் 2.30 மணிவரை மழை பெய்தது. ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்ததால் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் தவித்தனர்.
இன்று காலை முதல் மேகமூட்டம் நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- வீரகனூர்-70, கெங்கவல்லி-25, ஏற்காடு-48, காடையாம்பட்டி-43, கரியகோவில்-22, தம்மம்பட்டி-20, ஆனை மடுவு-20, தலைவாசல்-18, ஆத்தூர்-16.6, சேலம்-14, ஓமலூர்-8.4, பெத்த நாயக்கன்பாளையம்-6 என மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 351 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தூறியபடியே இருந்தது. இதேபோல் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக பள்ளிப்பாளையம் கொக்கராயன்பேட்டை அருகே பாப்பம்பாளையம் என்ற பகுதியில் இருந்த 50 ஆண்டுகால ஆலமரம் சாய்ந்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- குமாரபாளையம்-3.20, மங்கலபுரம்-22.20, நாமக்கல் 7.10, பரமத்திவேலூர்-3, புதுசத்திரம்-8, ராசிபுரம்-14.90, சேந்தமங்கலம்-27, திருச்செங்கோடு-11, கலெக்டர் அலுவலகம்-11.90, கொல்லிமலை செம்மேடு-22 என மாவட்டத்தில் 131.30 மீல்லி மீட்டர் மழை பொழிந்தது. சராசரியாக 10.94 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.