அக்போவின் நிலை மோசமடைகிறது !!
சமீப காலங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள அக்போ யானையின் உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாக வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு காயத்தினால் பாதிப்படைந்துள்ள அக்போவைக் குணப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். யானைக்கு சிகிச்சையளித்து வரும் விசேட கால்நடை மருத்துவருக்கு ரூ. 50,000 முற்பணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. யானையின் மருத்துவத்திற்காக மேலும் நிதியை ஒதுக்க நாம் தயாராகவுள்ளோம்” என அமைச்சர் தெரிவித்தார்.
”யானையின் சிகிச்சைக்கு வெளிநாட்டு உதவிகள் எதுவும் தேவையில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், விலங்கின் பெயரைக் கூறி நிதி வசூலிப்பதன் மூலம் சில குழுக்கள் சமூக ஊடகங்களில் ஊழலை மேற்கொள்வதாக சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். அக்போவிற்காக நிதி சேர்க்கும் எந்தத் திட்டத்தையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.