;
Athirady Tamil News

சென்னையில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை- மாநகராட்சி ஆணையர்!!

0

சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் மாடு முட்டி பள்ளி சிறுமி படுகாயமடைந்ததையடுத்து, இதுபோல் இனி எந்த குழந்தைக்கும் நிகழக்கூடாது என்று சிறுமியின் தாத்தா வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார். தலையில் 4 தையல் போடப்பட்டுள்ளது. உடம்பில் காயங்கள் உள்ளது. சிறுமி அதிர்ச்சியில் உள்ளார். கண் சிவந்து காணப்படுகிறது என்று கூறினார். சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மாடு முட்டி சிறுமி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 மாடுகளும் பிடிக்கப்பட்டு அதற்கென உரிய மாட்டு தொழுவத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டுக்கு வேறு ஏதேனும் வெறி பிடித்த நோய் உள்ளதா? என கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கால்நடை பராமரிப்பு மையத்திற்கு மாற்றப்படும். மாடுகளை வளர்க்க தேவையான அளவு இடம் இல்லாமல் தெருவை நம்பி வளர்க்கப்படும் மாட்டை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்றால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.