I.N.D.I.A. கூட்டணி பெயரை NDA -வில் இருந்து திருடிவிட்டனர்: பிரதமர் மோடி கடும் தாக்கு!!
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியையும் கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:- கடந்த 70 வருடங்களாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் உறங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு எந்த இலக்கும் கிடையாது; இந்தியாவை காங்கிரஸ் எப்போதும் நம்பியது இல்லை. இந்தியாவுக்கு எதிரான அனைத்தையும் காங்கிரஸ் உடனடியாக பற்றிக்கொள்ளும். தொலைநோக்கு சிந்தனை காங்கிரசில் இல்லை. பழைய வாகனத்திற்கு புதிய பெயிண்ட் அடிப்பதன் மூலம் அந்த பழைய வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற முயற்சிக்கிறீர்கள். பழைய கூட்டணிக்கு புதிய பெயிண்ட் அடித்து புதிய பெயர் வைத்துள்ளீர்கள்.
உங்கள் சீரழிவை நீங்களே கொண்டாடி வருகிறீர்கள். எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இறுதிச்சடங்கை நடத்திவிட்டன. I.N.D.I.A. கூட்டணி பெயரை NDA -வில் இருந்துதான் திருடி உள்ளனர். NDA-வில் இரண்டு I -க்களை சேர்த்து புதிய பெயரை சூட்டிக்கொண்டுள்ளனர். இதில் உள்ள முதல் I கூட்டணியில் அங்கம் வகிக்கும் 26 கட்சிகளின் ஆணவத்தைக் குறிக்கிறது, மற்றொரு I ஒரு குடும்பத்தின் ஆணவத்தைக் குறிக்கிறது. பெயர், கொள்கை என எதுவும் அவர்களுடையது இல்லை.
I.N.D.I.A. எனும் பெயரால் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த பார்க்கிறார்கள். பெயரை மாற்றுவதன் மூலம் ஆட்சியை பிடிக்க முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். மோடியின் பேச்சைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். குறிப்பாக, மணிப்பூர் விவகாரம் பற்றி பேசவேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘மணிப்பூர், மணிப்பூர்’ என முழக்கமிட்டனர். ஒரு கட்டத்தில் மோடியின் உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.