சீன தொழில்நுட்பங்களில் அமெரிக்க முதலீடுகளுக்கு கட்டுப்பாடு: ஜோ பைடனின் புதிய நிர்வாக உத்தரவு!!
உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் ஒரு புவிசார் அரசியல் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு தொடர்ச்சியாக தங்கள் நாட்டின் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இதன்படி, சில முக்கியமான தொழில்நுட்பங்களில் அமெரிக்காவிலிருந்து சீனாவில் செய்யப்படும் முதலீடுகளை அமெரிக்கா தடைசெய்துள்ளது. மேலும் பிற தொழில்நுட்ப துறைகளில் முதலீடு செய்யவும், இனி அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படும்.
அமெரிக்க பாராளுமன்றத்திற்கு பைடன் எழுதியுள்ள கடிதத்தில், “ராணுவம், உளவுத்துறை, கண்காணிப்பு, மற்றும் இணையம் சார்ந்த துறைகளில் உள்ள முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புக்களில் சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்கிறேன்” என கூறியுள்ளார். இந்த புதிய நிர்வாக உத்தரவின்படி செமிகண்டக்டர்கள் மற்றும் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறை, குவாண்டம் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் சில செயற்கை நுண்ணறிவு அமைப்பு துறை ஆகிய மூன்று துறைகளிலும் சீனாவில் உள்ள நிறுவனங்களில் சில அமெரிக்க முதலீடுகளை தடை செய்யவும் அல்லது கட்டுப்படுத்தவும் அமெரிக்க கருவூல செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
பொருளாதார நலன்களை காட்டிலும் தேசிய பாதுகாப்பை கருதியே இந்த நிர்வாக உத்தரவுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் இன்றியமையாத இரு நாடுகளின் பரந்த அளவிலான பொருளாதார வர்த்தகம் பாதுகாக்கப்படும் என்றும் அதே வேளையில், சீனா தன் ராணுவத்தை மேம்படுத்துவதற்காக அதன் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடுகளை பயன்படுத்துவதை இந்த உத்தரவு தடை செய்ய உதவும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பைடன் அரசாங்கம் சீனாவுடனான வர்த்தக உறவில் இருந்து துண்டித்து கொள்ள விரும்பவில்லையென்றாலும் சீனாவிற்கெதிராக சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மேம்பட்ட கம்ப்யூட்டர் சிப் அளவை குறைத்தது, சீனாவில் செய்யப்படும் அமெரிக்க முதலீடுகளை குறைத்தது மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகரித்த வரி விகிதங்களை அப்படியே வைத்திருப்பது உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த நிர்வாக உத்தரவிற்கு எதிர்வினையாக சீனா என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.