மழைக்கு ஒதுங்கியபோது சோகம்- மாடி படிக்கட்டு இடிந்து விழுந்து 2 கல்லூரி மாணவர்கள் பலி!!
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியை சேர்ந்தவர் பிரென்ச் ஜெபரி தவமணி (வயது 23), சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திமோ மில்கி (19), பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (19), சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாய் கவுசிகன் (19). இவர்கள் 4 பேரும் சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் இவர்கள் உள்பட 6 பேர் 3 இருசக்கர வாகனங்களில் சேலையூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஏரிக்கரை தெருவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மழை பெய்ததால் அவர்கள் அங்கிருந்த பழைய கட்டிடத்தின் மாடி படிக்கட்டுக்கு கீழே சென்று மழைக்காக ஒதுங்கி நின்றனர். திடீரென அந்த மாடி படிக்கட்டு இடிந்து, மழைக்காக ஒதுங்கி நின்ற கல்லூரி மாணவர்கள் மீது விழுந்தது. இதில் பிரென்ச் ஜெபரி தவமணி, திமோ மில்கி, அஸ்வின், சாய் கவுசிகன் ஆகிய 4 பேரும் கட்டிட இடுபாடுக்குள் சிக்கி கொண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற 2 மாணவர்களும் ஓடிச்சென்று அங்கிருந்த பொதுமக்கள், தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றி 4 பேரையும் வெளியே மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட 4 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மாணவர்கள் பிரென்ச் ஜெபரி தவமணி, திமோ மில்கி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அஸ்வின், சாய் கவுசிகன் ஆகியோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். பலியான மாணவர்களின் உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சேலையூர் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள சேலையூர் ஏரிக்கரை பகுதியில் இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு சம்பந்தமே இல்லாத இந்த ஏரிக்கரை பகுதியில் வந்து மழைக்கு ஒதுங்கியபோது பலியாகி உள்ளனர். அவர்கள் மது அருந்த வந்தார்களா? என்பது குறித்தும் சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.