அடிபணிய வைக்கவே பாலியல் வன்முறையை பயன்படுத்துகிறார்கள்: மணிப்பூர் வன்முறை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை!!
மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறைக்கு 160-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் உயிருக்குப் பயந்து ஊரை காலி செய்து நிவாரண முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். மூன்று மாதங்களாகியும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. வன்முறை தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கடந்த மாதம் இரண்டு பெண்கள் தொடர்பான வீடியோ வெளியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை மேற்பார்வையிடுவதற்கு, உயர்நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைக்குமாறு கடந்த 7-ம் தேதி உத்தரவிட்டது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்த உத்தரவு நேற்று இரவு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த உத்தரவில், மணிப்பூரில் பெண்கள் கொடூரமாக சித்ரவதைகளுக்கு ஆளான விதம் குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் கூறியிருப்பதாவது:- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. கும்பலாக சேர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை தொடர்வதற்கு, அவர்கள் அதிக அளவில் உள்ள பிரிவில் உள்ளவர்கள் என்றால் குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் போன்ற பல காரணங்கள் உள்ளன. மதவெறி போன்ற வன்முறை நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தப்பியவர்களை அடிபணிய வைக்கும் தகவலை வெளிப்படுத்தவே பாலியல் வன்முறை போன்ற கொடூர வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள்.
மோதலின்போது பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை, கொடுமையைத் தவிர வேறு ஏதுமில்லை. இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயலில் ஈடுபடுவோரை தடுக்கவும், வன்முறையில் தாக்கப்படுபவர்களை பாதுகாப்பதும் அரசின் கடமையாகும். மேலும், பெண்களுக்கு எதிராக மே 4-ந்தேதியில் இருந்து நடைபெற்ற வன்முறைக்கு உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
பெரும்பான்மை சமூகமான மைதேயி சமூகத்தினர் பட்டியல் பழங்குடி அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே 3-ம் தேதி மலை மாவட்டங்களில் ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணி’ நடத்தப்பட்டது. அவர்களுக்கு எதிராக மைதேயி சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினரிடைய மோதல் ஏற்பட்டு, கடும் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது.