தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடுங்கள்.. கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!!
காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை என்றும் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.