I.N.D.I.A. கூட்டணி பெயருக்கு எதிரான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. எனும் பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்தியா என்ற பொருள்படும்படி இந்த கூட்டணியின் பெயர் இருப்பதால், இந்த பெயரை கூட்டணிக்கு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
அதன்படி இந்த வழக்கு, நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, இந்தியாவுக்கு எதிராக பா.ஜ.க. போட்டிடுவதாக பொதுமக்கள் மனதில் ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கும் என்றும், தேர்தலில் இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், தேர்தல் விதிமுறை மீறல் ஏதேனும் இருந்தால், தேர்தல் கமிஷனுக்குச் செல்லுங்கள் என மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.