வயநாடு தொகுதியில் இன்று மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி!!
கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராகுல் காந்தி. இவர் அடிக்கடி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் மோடி குடும்பப் பெயர் குறித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் எம்.பி. பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கடந்த 4-ந்தேதி அவருக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைத்தனர். இதனையடுத்து தகுதி நீக்க உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து ராகுல் காந்தி பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
மீண்டும் எம்.பி.யாக பதவியேற்ற பிறகு அவர் தனது தொகுதியான வயநாடு செல்ல திட்டமிட்டார். 12 மற்றும் 13-ந் தேதிகளில் கேரளா சென்று தொகுதி மக்களை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு வயநாடு வருகிறார். அவருக்கு மாவட்ட தலைமையகமான கல்பேட்டை பகுதியில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கேரள மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சித்திக் தெரிவித்தார்.