திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி: பக்தர்கள் அச்சம்!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றனர். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், போத்தி ரெட்டி பாலத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். அவரது மனைவி சசிகலா.
மகள் லக்ஷிதா (வயது 6). நேற்று இரவு திருப்பதி வந்தனர். இரவு 7.30 மணி அளவில் தினேஷ் குமார் மனைவி, மகளுடன் அலிபிரி நடைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். நடைபாதையில் கூட்டம் இல்லை பெற்றோர் கைகளை பிடித்து வந்த சிறுமி அவர்களை விட்டு வேகமாக படியேறி சென்றார். நரசிம்ம சாமி கோவில் அருகே நடந்து சென்றபோது லக்ஷிதா திடீரென காணாமல் போனார். சிறுமி காணாமல் போனதால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடைபாதையில் பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் மகளை காணாததால் பதற்றம் அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் வனப்பகுதியில் லக்ஷிதாவை தேடி வந்தனர். மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி தனது பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தேடினர். இன்று காலை 7 மணி அளவில் லக்ஷிதா நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் எச்சம் கிடந்தது. இதனால் சிறுமியை சிறுத்தை இழுத்துச்சென்று அடித்து கொன்றுள்ளது தெரியவந்தது. சிறுமியின் பிணத்தை கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர்.
சாமி தரிசிக்க வந்து மகளை இழந்து விட்டதாக அழுது புரண்ட சம்பவம் காண்போரை கண் கலங்க செய்தது. இதையடுத்து போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மலைப்பாதையில் பலமுறை வனவிலங்குகள் தாக்கியதில் பக்தர்கள் காயம் மட்டும் அடைந்து வந்தனர். தற்போது முதல்முறையாக சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலியான சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி மலை அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன.
இதில் 10 சிறுத்தைகள் பக்தர்கள் நடைபாதை வரை அடிக்கடி நடமாடுகின்றன. தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வனவிலங்குகள் வராதபடி இரும்பிலான தடுப்பு வேலிகள் அமைத்து பக்தர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.