பள்ளி சீருடை விவகாரம்.. பா.ஜ.க.விற்கு எதிராக லட்சத்தீவில் போராடும் காங்கிரஸ்..!!
கேரளத்தின் கடற்கரையோரம் லக்கடிவ் கடல் பகுதியில் (Laccadive Sea) உள்ள 36 தனித்தனி தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டம், லட்சத்தீவு. இது இந்தியாவிற்கு சொந்தமானது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களிலேயே சிறியதான இதில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுபவரால் இது நிர்வகிக்கப்படுகிறது. இதன் தற்போதைய நிர்வகிப்பாளர் ப்ரஃபுல் கோடா பட்டேல். பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 10 தேதி லட்சத்தீவு நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
அங்கு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பெல்ட், டை, ஷூ மற்றும் சாக்ஸ் உள்ளிடக்கிய பள்ளி சீருடைகளின் புதிய வடிவம் ஒன்றை கட்டாயமாக்கியுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: “பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அணிவதால் அவர்களிடையே ஒரு உறுதித்தன்மை ஏற்படும். இதன் மூலம் மாணவர்களிடையே ஒழுக்க உணர்வும் வளரும். பரிந்துரைக்கப்பட்ட சீருடை வடிவங்களை தவிர வேறு உடைகளை அணிவது பள்ளி மாணவர்களை பாதிக்கும். இந்த முடிவு, மாணவர்கள், பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தபட்டவர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.” “ஒவ்வொரு மாணவ மாணவியரும் குறிப்பிட்டுள்ள சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும்.
இந்த சீருடை முறையை தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் அனைத்து வேலை நாட்களிலும் மாணவ மாணவியர் கண்டிப்பாக கடைபிடிப்பதை பள்ளி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்காத செயல்கள் கல்வித்துறையால் தீவிரமாக பார்க்கப்படும்,” இவ்வாறு அந்த அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் செக் டிசைனில் அரை பேண்ட் மற்றும் வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும், அவ்வகுப்பு வரை உள்ள மாணவியர் செக் டிசைனில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதே போல் 6-இல் இருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கடல் நீல நிறத்தில் முழு பேண்டும், வான் நீல நிற அரைக்கை சட்டையும், மாணவியர்கள் கடல் நீல நிறத்தில் பாவாடையும், வான் நீல நிறத்தில் அரைக்கை சட்டையும் அணிய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. “இது லட்சத்தீவில் வசித்து வருபவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை அழிப்பதாக உள்ளது” என்று லட்சத்தீவு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹம்துல்லா சயீத் குற்றம் சாட்டினார். இந்த புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதற்கு எதிராக மாணவ-மாணவியர்களின் துணையுடன் வகுப்பு புறக்கணிப்பு உட்பட கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க போவதாக எச்சரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் பள்ளி சீருடையின் காரணமாக ஒரு போராட்டம் வெடித்ததும், அச்சிக்கல் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.