ரஷியாவில் அரசு ஊழியர்கள் ஐ-போன் பயன்படுத்த தடை!!
உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. ரஷியாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரஷியர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.
உக்ரைன் ஆக்ரமிப்பை அடுத்து கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷியாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. எனினும், வேறு நாடுகளிலிருந்து ரஷியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஐ-போன் 14 உள்பட பல மாடல்களை ரஷியர்கள் வாங்கி பயனபடுத்தி வந்தனர். அமெரிக்காவின் ஒரு உளவு நடவடிக்கையின் விளைவாக ரஷியாவினரால் பயன்படுத்தப்படும் பல ஆயிரக்கணக்கான ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பாதுகாப்பை இழந்து விட்டதாக ரஷியாவின் முக்கிய உள்நாட்டு பாதுகாப்பு சேவை அமைப்பான எஃப்.எஸ்.பி. (FSB) 2 மாதங்களுக்கு முன் குற்றம் சாட்டியிருந்தது. ஆப்பிள் நிறுவனமும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து இதனை செய்ததாக எஃப்.எஸ்.பி. தெரிவித்தது.
இதனையடுத்து ரஷிய டிஜிட்டல் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் ஒரு சுற்றறிக்கை அந்நாட்டு அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. “ஐபோன் மற்றும் ஐபேடு மூலமாக அமெரிக்கா, ரஷிய மக்களின் தகவல் தொடர்புகளை அறிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஐ-போன்கள் மற்றும் ஐ-பேடுகளை வேலை நோக்கங்களுக்காக ரஷிய அரசாங்க ஊழியர்கள் இனி பயன்படுத்தப்பட கூடாது.
பணி பயன்பாடுகளுக்கான செயலிகளை உபயோகப்படுத்தவும், வேலை சம்பந்தமான மின்னஞ்சல் பரிமாற்றத்தை செய்யவும், ஆப்பிள் நிறுவன ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்த கூடாது. தனிப்பட்ட தேவைகளுக்காக ஐ-போன்களைப் பயன்படுத்தலாம்” என ரஷிய அரசாங்கத்தின் டிஜிட்டல் மேம்பாட்டுக்கான அமைச்சர் மக்சுட் ஷடேவ் (Maksut Shadaev) அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ஆப்பிளுடன் இணைந்து இந்த உளவு வேலையில் ஈடுபட்டதாக FSB குற்றம் சாட்டிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.