மத்திய பிரதேச அரசு 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு: பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு!!
மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஞானந்திரா அவாஸ்தி என்ற பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அந்தக் கடிதத்தில் மத்திய பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை மேற்கொள்காட்டி காங்கிரஸ் தலைவரான பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ”கர்நாடகாவில் ஊழல் பா.ஜனதா அரசு 40 சதவீத கமிஷனை பயன்படுத்தியது. தற்போது மத்திய பிரதேசத்தில், அதை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. 40 சதவீதம் கமிஷன் அரசை கர்நாடக மக்கள் அப்புறப்படுத்திவிட்டனர். தற்போது மத்திய பிரதேச மக்கள் 50 சதவீத கமிஷன் அரசை வெளியேற்றுவார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதே கருத்தை அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தும், அருண் யாதவும் வலியுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் நிமேஷ் பதாக் புகார் அளித்துள்ளார். கடிதம் யார் பெயரில் வெளியானதோ, அவர் மீதும் புகார் அளித்துள்ளார். சந்யோகிதகஞ்ச் காவல் நிலைய போலீசார் புகார் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 469 (போலி ஆவணம் மூலம் வேண்டுமென்றே நற்பெயருக்கு தீங்கு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.