தூத்துக்குடியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம்- மேளதாளத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!!
தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பாத யாத்திரையை கடந்த 28-ந்தேதி ராமேசு வரத்தில் தொடங்கினார். அதனை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் நேற்று முன்தினம் நடை பயணத்தை தொடங்கினார். நேற்று 2-வது நாளாக விளாத்தி குளம் அருகே உள்ள சுப்பிரமணிய புரத்தில் தொடங்கி புதியம்புத்தூரில் நிறைவு செய்தார்.
இந்நிலையில் 3-வது நாளாக இன்று தனது நடைபயணத்தை தூத்துக்குடியில் தொடங்கினார். காலை 9 மணிக்கு தூத்துக்குடி பழைய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் அருகில் மாநகராட்சி அலுவலகம் முன்பு இருந்து நடை பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து குருஸ் பர்ணாந்து சிலை, சத்திரம் தெரு ரதவீதிகள் மற்றும் அந்தோணியார் கோவில் வழியாக சண்முகபுரம் சென்று சுமங்கலி திருமண மண்டபம், கன்னிவிநாயகர் கோவில் சந்திப்பு பகுதியில் நிறைவடைந்தது. அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அண்ணாமலை பேசினார்.
அவருடன் மாநில நிர்வாகிகள் ஆறுமுகநேரி கே.ஆர்.எம். ராதா கிருஷ்ணன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜே.வி.அசோகன், மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜகண்ணன், மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், துணைத் தலைவர் சுவைத்தார், தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வழி நெடுகிலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் திரளான பா.ஜனதா கட்சியினரும் ஊர்வலமாக நடந்து வந்தனர். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்டவாறும் நடந்து சென்றார். அப்போது கோரிக்கை மனுக்களை புகார் பெட்டியில் அளித்தனர்.
அண்ணாமலை நடைபயணத்தையொட்டி கொடி, தோரணங்களுடன் பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், வான வேடிக்கை நடந்தது. மேலும் மேளதாளங்களுடன் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர். இன்று மாலை 4 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஆழ்வார்திருநகரி யில் சித்திரை வீதியில் தொடங்கி சுற்றுப்புற ஊர்கள் வழியாக ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு நடைபயணம் நிறைவடைகிறது. அங்கு அண்ணாமலை சிறப்புரையாற்றி பேசுகிறார். நாளை (திங்கட்கிழமை) திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.