கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் திறன்வகுப்பறை 95 வயது ஆசிரியரால் திறந்துவைப்பு!! (PHOTOS)
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டையொட்டிப் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையை கலாசாலையில் 1952 – 1953 காலப்பகுதியில் பயிற்சி பெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலய முன்னாள் ஆசிரியை பராசக்தி கந்தையா கடந்த வெள்ளிக்கிழமை 11.08.2023 திறந்துவைத்தார்.
அமெரிக்காவைத்தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமாகிய ஐஎம்எச்ஓ (IMHO) மற்றும் பிரித்தானியாவைத்தளமாகக் கொண்ட ரட்ணம் பவுண்டேசன் என்பவற்றின் அனுசரணையில் திறன்பலகையும் அதற்குரிய மடிக்கணினியும் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இசுருபாய கல்வி அமைச்சின் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான பணிப்பாளர் களனி ஹேமாலி கல்வி அமைச்சின் செயற்றிட்ட பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தனது தொண்ணூற்றைந்தாவது வயதிலும் தான் கற்ற கலாசாலை மீதான பற்றுடன் நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதோடு திறன் பலகையில் எழுதியும் ஆசிரிய மாணவர்கள் மத்தியில் தனது பயிற்சி கால அனுபவங்களை அரை மணி நேர உரையாக வழங்கியும் சிறப்பித்த மூத்த ஆசிரியர் பராசக்தியைப் பலரும் பாராட்டினர்.