வத்தளைப் பெண்ணுக்கு வலை!!
மத்திய வங்கியின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன.
ஹட்டன் அபோஸ்லி தோட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று ஹட்டன் பொலிஸில் ஞாயிற்றுக்கிழமை (13) பெண்ணொருவர் தங்களிடமிருந்து 31 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பல முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
வத்தளை மாபோல பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் பல மாதங்களாக வேறு நபர்களுடன் வந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 வருடங்களில் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாக கூறி ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
தலா 05 இலட்சம் வரையிலும் கடன் வழங்குவதாக கூறி, முத்திரைத் தீர்வை, காப்புறுதி.கோப்புகளைத் தயாரிப்பதற்காக தலா 31,500/= மற்றும் 17,500/= அறவிடப்பட்டதாக தோட்டத் தொழிலாளர்கள் ஹட்டன் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திம்புள்ள- பத்தனை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரையும் தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமது நிறுவனத்தின் தொடர்பு அதிகாரியாக பணிபுரியுமாறு அப்பெண்ணை அறிமுகப்படுத்தியதாக தோட்ட தொழிலாளர்கள் ஹட்டன் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடன் கிடைக்கும் என எதிர்பார்த்த தோட்டத் தொழிலாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு பணம் வாங்கியும், கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு முத்திரை கட்டணம், காப்புறுதி கட்டணம் மற்றும் கோப்பு தயாரிப்புக்கு தேவையான பணத்தை செலுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.