கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்- மிளகாய் பொடி தூவி தோழியை கொலை செய்து எரித்த பெண்!!
தெலுங்கானா மாநிலம், ஷம்சாபாத், சாய் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது45). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரிஸ்வானா பேகம் (43). இவர் தனது வீட்டின் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பேன்சி ஸ்டோருக்கு பொருட்களை வாங்குவதற்காக ரிஸ்வானா பேகம் மஞ்சுளாவிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். நெருங்கிய தோழிகளாக பழகி வந்தாலும் மஞ்சுளா தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு வந்தார். இருவருக்கும் இடையே நட்பில் விரிசல் ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை மஞ்சுளா, ரிஸ்வானா பேகத்தின் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் இருவரும் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது மஞ்சுளா ரிஸ்வானா பேகத்திடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த ரிஸ்வானா பேகம் வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து மஞ்சுளா கண்ணில் தூவினார். இதில் நிலை தடுமாறிய மஞ்சுளாவின் கழுத்தில் சேலையை கொண்டு இறுக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். பின்னர் மஞ்சுளாவின் பிணத்தை கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தார். நள்ளிரவு ரிஸ்வானா பேகம் தன்னுடைய வீட்டிலிருந்து 60 மீட்டர் தொலைவில் உள்ள காலி இடத்திற்கு மஞ்சுளாவின் பிணத்தை இழுத்து சென்றார். தனது பேன்சி ஸ்டோரில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மஞ்சுளாவின் உடல் மீது ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் மஞ்சுளாவின் உடல் முழுவதும் கருகியது.
அந்த வழியாக சென்றவர்கள் பெண்ணின் பிணம் எரிக்கப்பட்டு இருப்பது குறித்து ஷம்ஷாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மஞ்சுளாவின் கால் விரல் மோதிரம் மற்றும் மருந்து சீட்டு மட்டும் கிடைத்தது. உடல் முழுவதும் உருக்குலைந்து காணப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு கேமராவில் பதிவான காட்சியில் மஞ்சுளா, ரிஸ்வானா பேகம் வீட்டுக்குள் செல்வது தெரியவந்தது. இதன்மூலம் கொலையில் துப்பு துலங்கியது. போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த ரிஸ்வானா பேகம் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்திற்கு வந்த போலீசார் ரிஸ்வானா பேகத்தை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர் மஞ்சுளாவை கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் ரிஸ்வானா பேகத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.