பாகிஸ்தான் எல்லை அருகே மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு!!
மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக குஜராத் சென்றார். அப்போது குஜராத் ஹராமி நாலா பகுதி மற்றும் அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதிகளில் ஆய்வு செய்தார். அங்குள்ள எல்லை பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பார்வையிட்டார். கட்ச் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப்படையின் வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
ரூ.257 கோடி செலவில் கட்டப்படும் இந்த வளாகத்தில் நிர்வாக கட்டிடம், உணவகம், அலுவலர்கள் மெஸ், பயிற்சி மையம், அணிவகுப்பு மைதானம் மற்றும் 450-க்கும் மேற்பட்ட உப கரணங்களை பராமரிக்கும் பணிமனை ஆகியவை அடங்கும். மேலும், ஹராமி நாலா மற்றும் எல்லைப் புறக்காவல் நிலையத்தை பார்வையிட்ட அவர், மேற்கில் உள்ள இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். இந்த எல்லையில் பாதுகாப்புப் படையினருக்கு 7 கண்காணிப்பு கோபுரங்களை உருவாக்க இருப்பதாக அமித்ஷா தெரிவித்தார்.