எமது மக்களுக்கு காணி உரிமை வேண்டும்!!
இந்நாட்டில் முழுமையான பிரஜைகளாக நாம் மாற வேண்டும் என்றால் முதலில் காணி உரிமையை நாம் பெற வேண்டும் என்றும் நாங்கள் என்ன தனி நாடா கேட்டோம்? என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மலையகம் 200 நடை பவனியின் போது, தலவாக்கலை நகரில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மலையகம் 200 வருட வரலாற்றில் 2015-2019 காலப்பகுதியே பொற்காலமாகும். அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எமது மக்களுக்காக எதுவும் நடக்கவில்லை. 2015-2019 காலப்பகுதியில் நாம் தமிழ் முற்போக்கு கூட்டணியை ஆரம்பித்து எமது மக்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்றுக்கொடுத்தோம்.
அந்தவகையில் 7 பேர்ச்சஸ் காணியை பெற்றுக்கொடுத்தோம், பிரதேச செயலகங்களை அதிகரித்தோம், பிரதேச சபைகளை அதிகரித்தோம், பிரதேசசபை சட்டங்களை மாற்றினோம், அதிகார சபைகளை உருவாக்கினோம். தனி வீட்டுத் திட்டத்தை செயற்படுத்தினோம்.
ஆரம்பத்திலிருந்தே எமது உரிமைகளையும் சலுகைகளையும் நாம் போராடியே பெற்றுக்கொண்டு இருக்கின்றோம். ஜனாதிபதி அழைத்ததும் ஓடுற ஆட்கள் நாங்கள் கிடையாது. இந்த அரசிடமிருந்து ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.
நாம் எமது மலையக மக்களுக்கு உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். இந்த அரசாங்கத்தால் மலையக மக்களுக்கு எவ்வித வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்க முடியவில்லை. எமது மக்கள் பிச்சை கேட்கவில்லை. உரிமையைதான் கேட்கின்றனர்.
தனிநாடு கோரவில்லை. 10 பேர்ச்சஸ் காணியை தான் கோருகின்றனர். 200 வருட கால வரலாற்றில் இந்த நடைபவனியை முன்னெடுத்தமைக்கு காரணம் மலையக மக்களுக்கு குறைந்தது 10 பேர்ச்சஸ் காணி உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்பதே” என்றார்.