மும்பையில் 100 கிலோ வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தவர் கைது- 79 முறை புரளி கிளப்பியது அம்பலம்!!
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை நகரில் 100 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மாநகரின் முக்கிய இடங்கள் உள்பட பல்வேறு இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருட்களும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
தொடர்ந்து மிரட்டல் வந்த தொலைபேசி எண் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மால்வாணி பகுதியை சேர்ந்த ருக்சார் அகமது (வயது 43) என்பது தெரியவந்தது. தையல் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களில் மட்டும் அவர் இதேபோல மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 79 முறை போன் செய்திருப்பதும் தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.