சிறுத்தை நடமாட்டம் எதிரொலி – திருப்பதி மலைப்பாதைகளில் சிறுவா், சிறுமியருக்கு கட்டுப்பாடு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு வருகின்றனர். இதற்கிடையே, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்.
அவர், தனது மனைவி சசிகலா மற்றும் மகள் லக்ஷிதாவுடன் நேற்று முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதையில் வந்தார். அப்போது தனியாக நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோரை அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 நடைபாதைகளிலும் நடந்து வர அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் குறைந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.