சீனாவில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலி!!
சீனாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஜியாங் மாவட்டம் ஹாஸ் என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் வீடுகள் இடிந்து பலர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. பலர் இடிபாடுகளுக்குள் மாட்டி இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை மோப்பநாய் உதவியுடன் மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கி உள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.