திருப்பதி நடைபாதையில் குழந்தையை கொன்ற சிறுத்தை மீண்டும் நடமாட்டம்- பக்தர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு!!
திருப்பதி ஏழுமலையான் கோவில் அலிபிரி நடைபாதையில், சிறுமியை சிறுத்தை கொன்றது. இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்ட கூண்டில் பெரிய சிறுத்தை ஒன்று சிக்கியது. இது குழந்தையை கவ்வி சென்றிருந்தால் முழுவதுமாக சாப்பிட்டிருக்கும். குழந்தையை கொன்றது இதைவிட சிறிய சிறுத்தையாகத்தான் இருக்க முடியும். எனவே மேலும் ஒரு கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சிறுமியை கொன்ற சிறுத்தை அலிபிரி நடைபாதையில் நடமாடியது. நடைபாதை அருகில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பார்த்து பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
சிறுத்தையின் மீது பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மற்றும் பொருட்களை தூக்கி வீசி எறிந்தனர். ஆனால் சிறுத்தை எந்த ஒரு அசைவும் இன்றி பயமுறுத்தியபடி நின்றது. பக்தர்கள் கூச்சலிட்டபடி அங்குமிங்கும் சிதறி ஓடியதால் பதட்டமான சூழல் நிலவியது. தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த சிறுத்தை வனப்பகுதிக்கு ஓடியது. சிறுத்தையின் நடமாட்டத்தால் நடைபாதையில் சென்றவர்கள் ஆங்காங்கே பயத்துடன் கூட்டம், கூட்டமாக நின்றனர். அதனை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது சுற்றி தெரியும் சிறுத்தை தான் குழந்தையை கொன்றது என தெரிய வந்துள்ளது. இதனால் நடைபாதை வழியாக பக்தர்கள் செல்ல அச்சம் அடைந்தனர்.