ஹம்பாந்தோட்டை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன ஒப்பந்தம் இரத்து!!
ஹம்பாந்தோட்டை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும் முதலீட்டு அதிகார சபைக்குமான ஒப்பந்தத்தை அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி சந்தைக்காக அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நாளொன்றுக்கு 420,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அமைச்சரவையானது 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 17 ஆம் திகதி இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதியளித்ததாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்தத் திட்ட நடைமுறைப்படுத்தலுக்காக 1,200 ஏக்கர் நிலப்பரப்பு 50 வருட நீண்ட கால குத்தகைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்ட முன்மொழிவாளர்கள் நிலத்தை குத்தகை அடிப்படையில் கையகப்படுத்தவில்லை. அத்துடன் திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை” என அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் திட்ட முன்மொழிவாளர்களுக்குப் பலமுறை எழுத்துமூலம் அறிவித்த போதும் அவர்கள் அதற்கு எந்தவித மறுமொழியும் தரவில்லை.
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விதிமுறைகளுக்கு அமைவாக திட்ட முன்மொழிவாளர் செயற்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.