அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கொள்ளைச் சம்பவம் !!
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் (13) கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வெஸ்ட்பில்ட் டோபாங்கா வணிக வளாகத்திலுள்ள ஓர் வர்த்தக நிலையத்திலேயே, மாலை 04 மணியளவில் 50 பேர் கொண்ட ஒரு குழுவினால் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.
முகமூடிகளை அணிந்து வந்த குறித்த குழுவினர், வாசலில் இருந்த காவலர்களின் முகங்கள் மீது கரடியை விரட்ட பயன்படுத்தும் மருந்தினை விசிறி அவர்களை மயக்கமடைய செய்துவிட்டு முன்னேறினர்.
அந்த கொள்ளைக் கும்பல் கடையில் உள்ள கைக்கு கிடைத்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்ததோடு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பல விலையுயர்ந்த பொருட்களையும், துணிக்கடை பொம்மைகளையும் நாசம் செய்தனர்.
அந்த கொள்ளையர்கள் அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களையும், ஆடைகளையும் கொள்ளையடித்த பிறகு காவல்துறை வருவதற்குள் வேக வேகமாக வெளியேறி, தப்பித்து சென்றனர்.
காட்டுமிராண்டித்தனமான ஒரு வன்முறையிலும், கொள்ளையிலும் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக விசாரணைகளை நடத்தி வருகிறது.
“இதற்காக அங்கிருந்தவர்களோடு நேரில் பேசி வருகிறோம், இது வெறும் கொள்ளை சம்பவம் மட்டுமல்ல, இப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விடயம்” என்று காவல்துறையினர் கூறினர்.
இக்குற்றத்தில் சம்பந்தபட்டவர்கள் விரைவில் பிடிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் எனவும் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ஆணையர் ஜிஸெல் எஸ்பினோஸா கூறியுள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.