அதெப்படி தேசிய கொடியை இப்படி செய்வீங்க? சர்ச்சையில் சிக்கிய உக்ரைன் பாடகி..!!
உக்ரைன் நாட்டின் புகழ் பெற்ற 4 பேர் கொண்ட பாடகர் குழு, ஷாந்தி பீப்பிள் (Shanti People). இக்குழுவின் முன்னணி பாடகி உமா ஷாந்தி. சுத்த சைவ உணவு பழக்கத்தை கொண்டுள்ள ஷாந்தி பீப்பிள் குழு இந்து மத வேத மந்திரங்களுடன் மின்னணு இசையை கலந்து புதுவித இசையை வழங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல நாடுகளில் இவர்களுக்கு ரசிகர்கள் உள்ளதால், இவர்களின் பாடல் குழு தங்கள் இசை நிகழ்ச்சிக்காக பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த 2022 அக்டோபரில் புனேயில் தங்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினர். இந்த வருடம் இந்திய சுற்றுப்பயணத்தில் சமீபத்தில் பெங்களூரு, போபாலில் இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். இதை முடித்து விட்டு நேற்று முன் தினம் மகாராஷ்டிராவின் புனே நகரில் முந்த்வா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் உமா ஷாந்தி இசை நிகழ்ச்சி நடத்தி கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது.
அதில் ஷாந்தி பீப்பிள் குழுவின் முன்னணி பாடகியான உமா ஷாந்தி இந்திய கொடியை கையில் பிடித்தபடி நடனமாடி, பிறகு அந்த தேசிய கொடியை பார்வையாளர்களை நோக்கி எறிவது தெரிகிறது. இதை கண்ட அஷுதோஷ் போஸ்லே எனும் வழக்கறிஞர் தேசிய கொடியை உமா அவமதித்ததாக புகார் ஒன்றை முந்த்வா காவல்துறையினரிடம் பதிவு செய்தார். இதனையடுத்து காவல் அதிகாரி விஷ்ணு தம்ஹானே இந்த வீடியோவை ஆராய்ந்து உமா ஷாந்தி மீதும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கரிக் மொரேன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார். காவல்துறையினர் இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.