மோடி அவரது வீட்டில் கொடியேற்றுவார்: மல்லிகார்ஜூன கார்கே!!
இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி இன்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின் செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, ”என்னுடைய 2-வது பிரதமர் பதவி காலத்தில் 10-வது முறையாக உரையாற்றியுள்ளேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை, அடுத்த வருடமும் இதே இடத்தில் மக்களிடம் பட்டியலிடுவேன்” எனத் தெரிவித்தார். இதன்மூலம் 3-வது முறையாக பிரதமர் ஆவது உறுதி என்பதை சூசகமாக தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ”பிரதமர் மோடி மீண்டும் ஒருமுறை அடுத்த வருடம் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார். அவர் அடுத்த வருடம் அவரது வீட்டில் கொடியேற்றுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ”மோடி செங்கோட்டையில் கொடியேற்றுவது கடைசி இதுதான் முறை” எனக் குறிப்பிட்டிருந்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ”சுதந்திரம் வாங்கி 75 வருடங்கள் ஆன நிலையில், இந்தியாவில் வளர்ச்சி பாராட்டத்தக்கது. ஆனால், விரும்பிய இலக்கை இன்னும் எட்டவில்லை” என்றார். 26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணி மோடியை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளது.