நைஜீரியாவில் போராளிகளுடன் மோதல்; 23 வீரர்கள் உட்பட 26 பேர் பலி: மீட்பு ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது!!
நைஜீரியாவில் ராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 23 வீரர்கள் உட்பட 26 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது. நைஜீரியா நாட்டின் மத்திய நைஜீரியா நகர பகுதியில் பதுங்கியிருந்த போராளி குழுக்கள், நைஜீரிய பாதுகாப்புப் படையினரை அவ்வப்போது தாக்கி வருகின்றனர்.
இதற்கு நைஜீரிய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. அம்புஸ் பகுதியில் ராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று ராணுவ அதிகாரிகள் உட்பட 23 வீரர்கள், மூன்று பொதுமக்கள் உட்பட 26 பேர் பலியாகினர்.
எட்டு வீரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச் சண்டையில் இறந்த வீரர்களின் உடல்களை மீட்பதற்காக நைஜீரிய விமானப் படையின் ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. அந்த ஹெலிகாப்டரில் மோதலில் உயிரிழந்த 11 பேரின் சடலங்கள், காயமடைந்த 7 பேர் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அந்த ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது.
அந்த ஹெலிகாப்டர் மீது போராளிகள் குழு துப்பாக்கிச் சூடு நடத்தி வீழ்த்தி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டரில் இருந்த ராணுவ வீரர்கள், துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த வீரர்கள் உயிருடன் உள்ளார்களா? என்பது குறித்து தெரியவில்லை. ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அவர்களும் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.