சிறுத்தை வந்தா குச்சியால் விரட்டுங்க.. திருப்பதி தேவஸ்தானம் ‘வேற லெவல்’ உத்தரவு!!
இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ளது திருப்பதி.
இந்துக்களுக்கு மிக முக்கிய புனித தலமாக கருதப்படும் திருப்பதியில் உள்ள திருமலை எனும் மலையில் உள்ள உலக புகழ் பெற்ற கோயிலில், இந்துக்கள் வழிபடும் தெய்வமான திருமாலின் சன்னதி உள்ளது. இவரை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி அங்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலின் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எனும் வாரியம் மேற்கொண்டு வருகிறது. திருப்பதியில் இருந்து மலை மீது உள்ள திருமலைக்கு பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மற்றும் 2 அல்லது 4 சக்கர வாகனங்கள் மூலமாக செல்வதற்கு சாலைகளும் உள்ளன. படிக்கட்டுகள் வழியாக மேல் திருப்பதிக்கு செல்ல சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.
சென்ற வாரம் அங்கு படிக்கட்டு மார்க்கமாக திருமலைக்கு சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த லக்ஷிதா எனும் 6-வயது சிறுமி பெற்றோரிடமிருந்து சற்று விலகி நடந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மலைப்பகுதியிலுள்ள காடுகளில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று அச்சிறுமியை தாக்கியதில், அச்சிறுமி உயிரிழந்தாள். இச்சம்பவத்திற்கு பிறகு திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே செல்ல விரும்பும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது. வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது: “நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்க கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும்.
தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும்,” இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது. திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவிக்கிறது.