;
Athirady Tamil News

கையில் இருந்தது பேனா.. அவசரத்தில் பெண் காவலர் எடுத்த முடிவால் பலியான உயிர்!!

0

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ளது டென்வர். டென்வர் பகுதியை சேர்ந்தவர் பிராண்டன் கோல் (36). இவர் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவர் மனைவி சக்கர நாற்காலியின் உதவியுடன்தான் எங்கும் செல்ல முடியும். அவர்களுக்குள் ஏதோ தகராறு நடைபெறுவதாகவும் அதில் கோல் தனது மனைவியை சக்கர நாற்காலியிலிருந்து கீழே தள்ளி விட்டு விட்டதாகவும், டென்வர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. கோல் மது போதையில் இருப்பது போல் தெரிகிறது என்று கூறிய தகவல் தெரிவித்தவர், கோல் கையில் ஏதும் ஆயுதம் உள்ளதா, கோலின் மனைவிக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என கூறினார். இதனையடுத்து அந்த வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

அங்கு கோல் மனைவியை கீழே தள்ளி விட்டதனால் அவர் தரையில் சக்கர நாற்காலிக்கு அருகே உட்கார்ந்திருந்தார். மனைவி மீது தாக்குதலில் ஈடுபட முயன்ற கோலை, காவல்துறை அதிகாரிகள் தங்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கைது செய்ய முற்பட்டனர். கைகளை மார்பளவு உயர்த்தியபடி கோல் அவர்களின் காரில் ஏற முயற்சித்தார். அந்த நேரத்தில் அவர் கையில் ஏதோ பொருளை எடுப்பதை அவர் பின்புறம் நின்றிருந்த ஒரு பெண் காவல் அதிகாரி கண்டார். அதனை ஒரு கத்தி என நினைத்த அந்த அதிகாரி உடனடியாக கோலை சுட்டார். இதில் கோல் உயிரிழந்தார். பிறகு, அவரை பரிசோதித்த போது கோல் கையில் இருந்தது கத்தி அல்ல, ஒரு கருப்பு மார்க்கர் பேனா என தெரிய வந்தது.

“இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என இது குறித்து டென்வர் காவல்துறை ஆணையர் ரான் தாமஸ் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பெண் அதிகாரி மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுமா இல்லையா என்பதை டென்வர் மாவட்ட நீதித்துறைதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு இது போன்ற சம்பவங்களில் காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பதை காவல்துறை ஆய்வு செய்யும் என தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.