;
Athirady Tamil News

வட்டி கம்மிதான்.. ரூ. 1 லட்சம் வரை வாங்கிக்கோங்க – பிரதமரின் சூப்பர் திட்டம்!

0

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி நேற்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் விஸ்வகர்மா யோஜனா மற்றும் லக்பதி தீதி எனும் இரு பெரும் திட்டங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), புதிய மத்திய அரசாங்கத்தின் திட்டமான “PM விஸ்வகர்மா”-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. “நேற்று சுதந்திர தின உரையில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், நாடு முழுவதுமுள்ள 30 லட்சம் கைவினை கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மானிய விலையில் பிணையமில்லாத கடன்கள் வழங்கப்படும்.

2023-ல் தொடங்கி 2028 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு இதற்காக ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்திற்காக 18 பாரம்பரிய வர்த்தகங்கள் சேர்க்கப்படும்” என இத்திட்டம் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார். “பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு PM விஸ்வகர்மா சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றோடு 5 சதவீத சலுகை வட்டியில் முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை கடன் உதவியும், இரண்டாவது தவணையாக ரூ. 2 லட்சம் வரை கடன் உதவியும் வழங்கப்படும்.

மேலும், இந்த திட்டத்தின் மூலம் கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கு உதவி, கருவிகள் வாங்க ஊக்குவிப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தலுக்கான ஆதரவு ஆகியவையும் வழங்கப்படும்” என்று இத்திட்டம் குறித்து மத்திய அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. PM விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், பூட்டு தயாரிப்பு கலைஞர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், காலணி தொழிலாளிகள் மற்றும் கொத்தனார்கள் ஆகியோர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.