லண்டனில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள் !!
பிரித்தானியாவின் இங்கிலாந்து பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கான உளவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் லண்டனில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஹரோ பகுதியில் தங்கி வாழ்ந்து வந்தமை அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட உளவாளிகள் தற்போது பிரித்தானியாவின் உயரடுக்கு காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ரஷ்ய பாதுகாப்புச் சேவையில் பணியாற்றியதாகக் கருதப்படும் இந்த மூன்று உளவாளிகளும் பல்கேரிய பிரஜைகளாவர்கள்.
இவர்களிடம் பிரித்தானியா, பல்கேரியா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், குரோஷியா, ஸ்லோவேனியா, கிரேக்கம் செக் குடியரசு என 19 நாடுகளின் கடவுச்சீட்டுகள், அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.
இந்த மூவரில் 41 வயதான பைசர் ஜாம்பசோவ் என்ற ஆணும் 31 வயதான கத்ரின் இவனோவா என்ற பெண்ணும் ஹரோவில் தமிழர்கள் வாழும் பகுதியில் வாழ்ந்து தமது உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் சவுத் ஹரோ பகுதியில் தமிழர்களின் வணிக அங்காடிகள் நிறைந்துள்ள பகுதிகளில் கூட சந்தேகத்துக்கு இடமின்றி சாதாரணமாக நடமாடியதாகவும் கூறப்பட்டுள்ளது.
லண்டனில் பிரித்தானியாவின் போர்விமானங்கள் தரித்துநிற்கும் நோர்த்ஹோல்ட் விமானப்படைத்தளத்தில் இருந்து ஒருமைல் தூரத்தில் இந்த உளவாளிகளின் வதிவிடம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாக மாறியுள்ளது.
இந்த விமானப்படைத்தளத்தின் ஊடாகவே பிரித்தானிய பிரதமர் உட்பட்ட முக்கிய பிரமுகர்களின் அதிகாரபூர்வ பயணங்கள் இடம்பெறுவதுண்டு.
மூன்றாவது உளவாளியாகக் கருதப்படும் 45 வயதான ஆர்லின் ரூசெவ் நோர்த் பகுதியில் வசித்துள்ளார்.
குறித்த மூவரும் பல ஆண்டுகளாக இங்கிலாந்தில் வசித்து பல்வேறு துறைகளில் பணிபுரிந்ததாகவும் இதில் டாசம்பசோவ் மற்றும் இவனோவா ஆகியோர் கணவன் மனைவியாக ஹரோவில் குடியிருந்தவர்கள் எனவும் இவர்கள் உண்மையான கணவன் மனைவியா அல்லது உளவுசேவைக்கா அவ்வாறு தம்மை வெளிப்படுத்தியவர்களா என்பது அறிவிக்கப்படவில்லை.
இவர்கள் இருவரும் வசித்த வீட்டில், ஒரு வாரத்துக்கும் மேலாக துப்பறிவாளர்கள் தேடுதல்களை நடத்தியுள்ளர்.
தற்பொழுது காவலில் உள்ள இவர்கள் மூவரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் வசித்த முன்னாள் ரஷ்ய – உளவுத்துறை அதிகாரியான அலெக்சாண்டர் லிட்வினென்கோ லண்டனில் வைத்து ரஷ்ய உளவாளிகளால் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவமும், அதேபோல 2018 இல், ரஷ்ய பிரித்தானிய இரட்டை உளவாளிகளான செர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் ரஷ்ய உளவாளிகள் நோவிச்சோக் என்ற கொடிய விசத்தை பயன்படுத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதும் பிரித்தானியாவில் ரஷ்ய உளவாளிகளின் நடவடிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.