ஒரு குடும்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது- பா.ஜனதா பதிலடி!!
டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. ஆனால் இதற்கு பா.ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘நேரு-காந்தி குடும்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்துவதில் காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது. ஆனால் அனைத்து பிரதமர்களுக்கும் மரியாதைக்குரிய இடம் வழங்கப்படுவதை மோடி உறுதி செய்துள்ளார். இதற்கு முன்பு வேறு எந்த பிரதமருக்கும் அருங்காட்சியகத்தில் இடம் கொடுக்கப்படவில்லை’ என தெரிவித்தார்.
இதைப்போல மற்றொரு முன்னாள் மந்திரியான முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘காங்கிரசை சேர்ந்தவர்கள் உள்பட அனைத்து பிரதமர்களையும் கவுரவிக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார். காங்கிரஸ் மறந்துபோன நமது தலைவர்களையும் அவர் அங்கீகரித்து இருக்கிறார். ஆனால் தேச கட்டமைப்பில் ஒரேயொரு குடும்பம் மட்டுமே பங்களித்ததாக காங்கிரஸ் நம்புகிறது. இத்தகைய உணர்ச்சிச் சுரண்டல் மூலம் எவ்வளவு காலம் மக்களை முட்டாளாக்க முடியும்?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.