நாடாளுமன்ற நிலைக்குழுவில் மீண்டும் ராகுல் காந்தி!!
வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குடும்ப பெயர் குறித்து பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் அரசு வழங்கிய வீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டன. பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார். அதில் இருந்தும் நீக்கப்பட்டார். ராகுல் காந்தி உச்சநீதிமன்றம் குஜராத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
அப்போது, உச்சநீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால் மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக மீண்டும் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.