;
Athirady Tamil News

நூற்றாண்டு இறுதிக்குள் தார் பாலைவனம் பசுமையாக மாறலாம்: ஆராய்ச்சியில் தகவல்!!

0

புவி வெப்பமயமாதல். இதுதான் உலகத்தையே தற்போது அச்சுறுத்தி கொண்டிருக்கும் வார்த்தை என்றால் மிகையாகாது. பருவநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பம் அடைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு இடையூறுகளை சந்திக்க நேரிட்டு வருகிறது. குறித்த காலத்தில் மழை பெய்யாமை, திடீரென அதிக மழைப்பொழிவு, அதிக வெப்பம் போன்றவை உலகை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் உலக நாடுகள் புவி வெப்பமயமாதல் தடுக்க பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த நூற்றாண்டிற்குள் உலகில் உள்ள பல பாலைவனங்கள் இன்னும் தங்களது பரப்பளவை அதிகரித்துக் கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பாலைவனமான தார் பாலைவனம், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பசுமையாக மாற வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தார் பாலைவனம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாகாணத்தில் பரந்து விரிந்து 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவை கொண்டதாகும். உலகின் 20-வது மிகப்பெரிய பாலைவனமான தார், வெப்பம் அதிகம் கொண்ட 9-வது மிகப்பெரிய பாலைவனம் ஆகும். பல்வேறு ஆராய்ச்சிகள் உலக வெப்பமயமாதல் காரணமாக உலக பாலைவனங்களின் பரப்பு அதிகமாகும் என யூகித்துள்ளனர். சகாரா பாலைவனம் ஆண்டுக்கு ஆயிரம் சதுர கி.மீட்டர் என்ற வகையில் 2050-க்குள் அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், ஆராய்ச்சி தொடர்பான பத்திரிகை ஒன்றில் புதிதாக வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில், எதிர்பாராத வகையில் தார் பாலைவனம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய-பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியங்களில் 50 சதவிகித அளவு வறண்டுள்ள பகுதிகளில், 1901 முதல் 2015 வரை, 10 முதல் 50 சதவீதம் வரை மழைபொழிவு அதிகரித்துள்ளதாக இந்த ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது. உலகம் தற்போது பசுமை எரிவாயுவிற்கு மாறி வரும் நிலையில், இந்த மழைபொழிவின் அளவு 50 முதல் 200 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. சமீபகாலங்களாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள பருவமழை பொழிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறித்தும் தெரிவித்துள்ள இந்த ஆய்வு, இந்திய பருவமழை பொழிவு கிழக்கு நோக்கி மெல்ல நகர்ந்துள்ளதனால் மேற்கு மற்றம் வடமேற்கு பிராந்தியங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கிறது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இங்கு வாழ்ந்த மக்களுக்கு, இந்த பருவமழை பொழிவு மிகவும் உதவியாக இருந்து அப்பகுதிகளை செழுமையாக வைத்திருந்ததாக வரலாற்று தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய இந்தியப் பருவமழை பொழிவில் ஏற்பட்டு வரும் மேற்கு நோக்கிய விரிவாக்கம், இந்தியாவின் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு பயன்படும். இது இப்பகுதிகளை ஈரநிலை பகுதிகளாக மாற்றலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவைப்படும் உணவு பாதுகாப்பை இது உறுதி செய்யும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.