;
Athirady Tamil News

தக்காளிக்கும் விடுமுறை தேவை: அதிரடியாக அறிவித்த பர்கர் கிங்!!

0

இந்திய மக்களின் உணவு தயாரிப்புகளில் வீடுகளிலும், உணவகங்களிலும் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் அத்தியாவசியமாக உபயோகப்படுத்தப்படுவது தக்காளி. சைவ மற்றும் அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான அனைத்து உணவு தயாரிப்புகளிலும் தக்காளி இடம்பெறும். சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் தக்காளி விலை ஒவ்வொரு நாளாக கடுமையாக உயர்ந்தது. கிலோ ஒன்று ரூ.10-லிருந்து ரூ.20-க்குள் விற்று வந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.100 எனும் அளவை தொட்டது. இந்த விலையேற்றம் காரணமாக பல குடும்பங்களில் தக்காளியின் பயன்பாடு குறைக்கப்பட்டது.

குடும்ப தலைவிகள் தொலைக்காட்சி பேட்டிகளிலும், சமூக ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் இது குறித்து தங்கள் கோபத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். இந்திய மற்றும் வெளிநாட்டு உணவு நிறுவனங்களை நடத்துபவர்கள் தங்கள் உணவு பண்டங்களின் விலையை ஏற்றும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் விலையேற்றம் விற்பனையை மந்தமாக்கி விடலாம் என்பதால் செய்வதறியாது இருந்தனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் பல கிளைகள் கொண்ட பன்னாட்டு உணவகமான அமெரிக்காவை சேர்ந்த “பர்கர் கிங்” (Burger King), தக்காளியின் வினியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாகவும், தரமான தக்காளி கிடைப்பதில் தொடர்ந்து நிலவும் சிக்கல் மற்றும் கட்டுக்கடங்காத விலையேற்றத்தின் காரணமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

“தக்காளிக்கும் விடுமுறைக்காலம் தேவைப்படுகிறது” என நகைச்சுவையாக குறிப்பிட்டு இந்நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் அந்நிறுவனம் கூறியிருப்பதாவது:- ஒப்பற்ற தரமான மற்றும் சுவையான உணவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் உறுதியுடன் உள்ளோம். ஆனால் தற்போது தக்காளியின் வினியோகமும், நாங்கள் எதிர்பார்க்கும் தக்காளியின் தரமும் கேள்விக்குரியதாக இருக்கிறது.

இதனால் தற்காலிகமாக தக்காளியை எங்களது உணவு தயாரிப்புகளில் நீக்கியுள்ளோம். ஆனால், மீண்டும் விரைவில் அவை சேர்க்கப்படும் என உறுதியளிக்கிறோம். நிலைமையை புரிந்து கொண்டு எங்களோடு ஒத்துழைக்குமாறு வாடிக்கையாளர்களை வேண்டுகிறோம். இவ்வாறு பர்கர் கிங் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க பன்னாட்டு உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) தங்கள் மெனுவில் தக்காளியை நீக்கியது என்பதும் மற்றொரு அமெரிக்க பன்னாட்டு உணவு நிறுவனமான சப்வே (Subway) தங்கள் சாலட் மற்றும் சாண்ட்விச் உட்பட பல தயாரிப்புகளில் தக்காளியை நீக்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தக்காளியின் விலையேற்றம் இந்தியாவில் அரசியல் கட்சிகளால் பரபரப்பாக்கப்பட்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை நேபாளம் உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வைத்திருக்கிறது. இருந்தும் தற்போதைய சந்தை நிலவரப்படி தக்காளியின் விலை கிலோ ரூ.60-லிருந்து தொடங்குகிறது. ரெஸ்டாரன்ட் பிராண்ட்ஸ் ஏஷியா எனும் நிறுவனத்தால் நடத்தப்படும் பர்கர் கிங் உணவகங்களுக்கு இந்தியாவில் மட்டும் சுமார் 400 கடைகள் உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.