இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் முடங்கியது!!
இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேகவெடிப்பு காரணமாக கன மழை கொட்டி தீர்த்ததால் சிம்லா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு உண்டானது. சிம்லாவின் சம்மர் ஹில், பாக்லி மற்றும் கிருஷ்ணா நகர் ஆகியவை நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. விமானப்படை ஹெலிகாப்டர்கள், ராணுவ வீரர்கள், பாதுகாப்பு படையினர் உதவியுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காங்க்ரா மாவட்டத்தின் இந்தோரா மற்றும் பதேபூர் பகுதிகளில் இருந்து மட்டும் 1,731 பேர் மீட்கப்பட்டுள்ளதாக துணை ஆணையர் நிபுன் ஜிண்டால் தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை கொட்டியுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை சராசரியாக 730 மி.மீ. மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கடந்த 54 நாட்களில் 2742 மி.மீ. மழை கொட்டியுள்ளது என்று வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கனமழையால் 800-க்கும் அதிகமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவுகளால் 9,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மழை இன்னும் தொடர்ந்து பெய்வதால் மக்கள் பரிதவிக்கின்றனர். சமீபத்திய மழை மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தில் ரூ.10 ஆயிரம் கோடி சேதம் அடைந்துள்ளதாகவும், மழையால் சிதைந்த உள்கட்டமைப்பை மீண்டும் சரிசெய்ய ஒரு வருடம் ஆகும் என்றும் முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்து உள்ளார். இமாச்சல பிரதேசத்தில் ஆப்பிள் உற்பத்தி அதிகமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய மழையால் ஆப்பிள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக, பழத்தோட்டங்களில் விளைந்த ஆப்பிள்கள் விழுந்து சேதமாகி உள்ளன. இமாச்சலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 24 முதல் 28 கிலோ எடையுள்ள 3-4 கோடி ஆப்பிள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் இம்முறை ஒன்று முதல் 1.50 கோடி பெட்டிகள் மட்டுமே அறுவடை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல உத்தரகாண்ட் மாநிலத்திலும் வரலாறு காணாத மழை, நிலச்சரிவு ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. உத்தரகாண்டின் லக்சுமன் ஜூலாவில் உள்ள ஓய்வு விடுதியில் ஒரு தம்பதி மற்றும் அவர்களது மகன் உட்பட 4 பேர் உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.
இயற்கையின் இந்த கோர தாணடவத்தால் இமாசலபிரதேசத்தில் இதுவரை 71 பேரும், உத்தரகாண்ட் மாநிலத்தில் 10 பேரும் என மொத்தம் 81 பேர் பலியானார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மொத்தம் 57 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. கனமழை, நிலச்சரிவில் மேலும் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே உத்தரகாண்டில் இன்னும் 2 நாட்கள் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை இலாகா தெரிவித்து உள்ளது. இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 2 மாநிலங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.