ATM அட்டை திருட்டின் பின்னர் அம்பலமான உண்மைகள்!!
ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மனைவிக்கு சொந்தமான ATM அட்டையை திருடி 89,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த நபரையும் அவரது கள்ளக்காதலியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட ATM அட்டையை பயன்படுத்தி மூன்று தடவைகள் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜன்டின் மனைவி எப்பாவல பொலிஸில், தனது ATM அட்டையை திருடி ஒருவர் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாக எப்பாவல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்படி, பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழு, சந்தேக நபர் பொருட்களை வாங்கியதாகக் கூறப்படும் கடைகளின் சிசிடிவியை சோதனையிட்டபோது, சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த நபர் பேருந்து சாரதி என்பதும், அவரது சட்டபூர்வமான மனைவியை தவிர, அவருக்கு எப்பாவல, கோனபத்திராவ, கந்திரியாகம, இபோலாகம, கெக்கிராவ பிரதேசங்களில் கள்ளக்காதலிகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிள் அந்த பெண்களின் ஒருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கள்ளக்காதலிகள் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
சந்தேகநபர் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது கள்ளக்காதலி ஒருவர் கடந்த 13ஆம் திகதி ATM அட்டையை கீழே கிடந்து எடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் எப்பாவல, தம்புத்தேகம மற்றும் கெக்கிராவ ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ATM அட்டையை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ATM அட்டையின் உரிமையாளரான ஓய்வுபெற்ற பொலிஸ் சார்ஜென்ட்டின் மனைவி கடந்த 15ம் திகதி ATM இல் பணம் எடுப்பதற்காக அட்டையை தேடியபோது அது காணாமல் போயுள்ளமை தெரியவந்தது.
பின்னர் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் எப்பாவல பொலிஸார், சந்தேக நபரையும் அவரது கள்ளக்காதலியையும் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.