சவால்களை எதிர்கொள்ள சீனா உதவும் !!
நிதிக் கடன் தொடர்பான சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி உறுதிப்படுத்தினார்.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் நடைபெறும் ஏழாவது சீன-தெற்காசிய கண்காட்சியையொட்டி, இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சீனா எப்போதும் இலங்கையின் நம்பகமான மூலோபாய பங்காளியாக இருப்பதாகவும் இலங்கை எப்போதும் சீனாவுடன் நட்புறவுடன் இருப்பதாகவும், அதன் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறது என்பதையும் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இறையாண்மை, சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாக்க சீனா உறுதியாக ஆதரிக்கும் என்று தெரிவித்த அவர், இலங்கையுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் ஆட்சியில் அனுபவப் பரிமாற்றங்களை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தார்.
இலங்கையின் சுதந்திரமான அபிவிருத்திக்கான திறனை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தியில்லாத வறுமைப் பொறியிலிருந்து விடுபடுவதற்கும் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.
வறுமை மற்றும் வளர்ச்சியற்ற நிலையில் இருந்து இலங்கையை விடுவித்து அதன் தொழில்மயமாக்கல் செயன்முறை மற்றும் விவசாய நவீனமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனாவின் உறுதியான ஆதரவுக்காகவும், கடினமான காலங்களில் இலங்கைக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவிகளுக்காகவும் சீனாவுக்கு பிரதமர் குணவர்தன நன்றி தெரிவித்தார்.