தேர்தல் தேதி அறிவிக்கும் முன் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க!!
ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன. மிசோரமில், மணிப்பூர் கலவரத்தை அடுத்து கூட்டணிக் கட்சி மற்றும் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணியுடனான பா.ஜ.க கூட்டணி முறிந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே பா.ஜ.க வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவித்தது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும், 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டசபைக்கு 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும் பா.ஜ.க அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து வரும் 5 மாநில சட்டசபை தேர்தலில் தோல்வியை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் வியூகங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.