ஹவாய் காட்டுத்தீ – பலியானோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு!!
அமெரிக்காவின் நிர்வாகத்திற்கு கீழ் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவு மாகாணம் வருகிறது. உள்ளூர் மக்கள்தொகையை தவிர்த்து ஏராளமான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவுக்காக அங்கு செல்வர். கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹவாய் தீவின் மேற்கே உள்ள மவுய் நகரில் காட்டுத்தீ பிடித்தது. மளமளவென தீப்பற்றி எரிந்த நிலையில சூறாவளி காற்று வீசியதன் காரணமாக முக்கிய நகரங்களான ஹலைனா, குலா உள்ளிட்ட பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவியது.
இதனால் பெரும்பாலான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. வீடுகள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகி நாசமாகின. சேத மதிப்பு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். தீயில் கருகி உயிரிழந்தோரில் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஹலைனா நகரை சேர்ந்த அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்புப் பணிகளில் உதவும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெறும் பணியும் நடக்கிறது. ஆள் பற்றாக்குறையால் அமெரிக்காவில் இருந்து ராணுவம் களம் இறங்கியது. இந்நிலையில் ஹவாய் தீவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லவுள்ளார். காட்டுத்தீ பரவியுள்ள பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.